கார் மீது பள்ளி வேன் மோதி விபத்து - 2 மாணவிகள் பலி

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டம் இட்டாவா பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த வேன் இன்று காலை அப்பகுதியில் உள்ள கைடா கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் 12 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்துகொண்டிருந்தது.
இந்நிலையில், இட்டாவா அருகே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையில் எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பள்ளி வேனில் பயணித்த தனு (வயது 14) , பிரிஜல் ஆரியா (வயது 9) ஆகிய 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வேன் டிரைவர், மாணவ, மாணவியர் என 6 பேர் படுகாயமடைந்தனர். காரில் பயணித்த 3 பேரும் காயமடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






