ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டு கட்டாயம் இருக்க வேண்டும்-வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு


ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டு கட்டாயம் இருக்க வேண்டும்-வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
x
தினத்தந்தி 5 Jun 2025 8:19 AM IST (Updated: 5 Jun 2025 1:13 PM IST)
t-max-icont-min-icon

தற்போதைய நிலையில் ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன.

சென்னை,

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடிகிறது. அதற்கு கீழ் உள்ள தொகையினை கேட்டால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லை என்று தான் வருகிறது. அதனால் ஏழை-எளியோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏனென்றால் அவர்களது கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுக்க முடியவில்லை. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு அதிகளவில் புகார்கள் சென்றன.

இந்த நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி தரப்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்கள் தங்களது ஏ.டி.எம்.கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும். அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வினியோகிக்க வேண்டும். அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வினியோகிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் நமது ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன. அதில் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் இல்லை. அதேபோல் ரூ.100, ரூ.200 கேசெட்டில், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதில்லை. முழுவதுமாக ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரிசர்வ வங்கி உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story