திருமணத்திற்கு சென்று திரும்பியபோது விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

பஸ் டிரைவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மோராதாபாத் மாவட்டம் அப்துல்லாபூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று மாலை டெம்போ வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், மோராதாபாத் மாவட்டத்தின் ரப்தர்பூர் கிராமம் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த பஸ் அதிவேகமாக டெம்போ வாகனம் மீது மோதியது. இந்த கோர விபத்தில் டொம்போவில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். பஸ்சில் பயணித்த சிலரும் லேசான காயமடைந்தனர்.
இதையடுத்து அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.






