சபரிமலையில் இதுவரை 30 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் ..கடந்த ஆண்டை விட குறைவு

மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.
சபரிமலை,
சபரிமலையில் இந்தாண்டுக்கான மண்டல பூஜைகளுக்காக சபரிமலை நடை நவ.16-ம் தேதி திறக்கப்பட்டது. நவ.17-ம் தேதி அதிகாலை முதல் மண்டல பூஜை தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த சீசனில் வித்தியாசமாக சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது. மற்ற நாட்களில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. அரவணை விற்பனையிலும் பல மடங்கு உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சபரிமலை கோவிலுக்கு இதுவரை வருகை தந்த பக்தர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2 லட்சத்திற்கும் குறைவு என கூறப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி வரை கிடைத்த தகவலின்படி, இதுவரை 30,01,532 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு டிச.23-ம் தேதிக்குள் 30,78,044 பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதிக்குள் வருகை தந்த மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 32,49,756 ஆகும்.
2023-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதிக்குள் வருகை தந்த மொத்த பக்தர்களின் எண்ணிக்கை 28.42 லட்சமாக இருந்தது. நடப்பாண்டு சீசன் தொடக்கத்தில் அதிகப்படியான பக்தர்கள் வருகையால் கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆன்லைன் மற்றும் நேரடி பதிவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் நாளை காலை 10.10க்கும் 11.30க்கும் இடையே மண்டல பூஜை நடைபெறுகிறது. வழக்கமான பூஜைகளுக்குப் பின் இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டு இவ்வருட 41 நாள் மண்டல காலம் நிறைவடையும். மீண்டும் மகரவிளக்கு பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.
இன்று 30 ஆயிரம் பேருக்கும், நாளை 35 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களிலும் உடனடி முன்பதிவு மூலம் 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜையையொட்டி சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






