படேல் சிலையை உருவாக்கிய சிற்பி ராம் வி சுதார் மறைவு: பிரதமர், ஜனாதிபதி இரங்கல்

மறைந்த சிற்பி ராம் சுதாரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
மும்பை,
ஒற்றுமை சிலையை உருவாக்கிய பிரபல சிற்பி ராம் சுதார் காலமானார். அவருக்கு வயது 100. உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நள்ளிரவில் காலமானார். தனது 70 ஆண்டுகால சேவையில் இந்தியாவைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
ராம் சுதார் தனது பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றில் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகியவை அடங்கும். 2019 ஆம் ஆண்டில், அவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. ராம் சுதார் 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி குஜராத்தின் கோத்ராவில் பிறந்தார். அவர் தனது வாழ்க்கையில் பல பிரபலமான சிற்பங்களை உருவாக்கியுள்ளார்.
குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் ‘ஒற்றுமை சிலை’ உள்ளிட்ட பிரமாண்ட சிலைகளை ராம் சுதர் வடிவமைத்திருந்தார். மேலும் ராம் சுதார் 350க்கும் மேற்பட்ட மகாத்மா காந்தியின் சிலைகளை உருவாக்கியுள்ளார், அவை உலகம் முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, சிற்பி ராம் வான்ஜி சுதாரின் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இத்துடன், மறைந்த சிற்பி ராம் சுதாரின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
முன்னதாக, குஜராத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலின் சிலையை வடிவமைத்து உருவாக்கிய சிற்பி ராம் வி சுதார், அயோத்தி கோவிலின் ராமர் சிலை உருவாக்கத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.






