பெங்களூரு போலீஸ் கமிஷனராக சீமந்த் குமார் சிங் நியமனம்

பெங்களூரு போலீஸ் கமிஷனராக அடுத்த உத்தரவு வரும் வரை மூத்த ஐ.பி.எஸ். அதிகரி சீமந்த் குமார் சிங் நியமனம் செய்யப்படுகிறார்.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று முன்தினம் விளையாடின. இதில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுபற்றி சித்தராமையா, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். அவருடைய அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறியதற்காக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்தா உள்பட பல்வேறு மூத்த காவல் துறை அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகரி சீமந்த் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்ட அறிவிப்பில், பெங்களூருவின் கூடுதல் டி.ஜி.பி.யான சீமந்த் குமார் சிங், உடனடியாக, அடுத்த உத்தரவு வரும் வரை பெங்களூரு நகர கூடுதல் டி.ஜி.பி. மற்றும் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






