செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தளர்வுகள்; வாரம் இருமுறை ஆஜராக தேவையில்லை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
அதே சமயம், வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் ஆஜராக வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை தளர்த்த கோரி செந்தில் பாலாஜி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தளர்வுகளை வழங்கியுள்ளது. இதன்படி வாரம் இருமுறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக தேவையில்லை எனவும், தேவைப்பட்டால் மட்டும் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் அழைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அமலாக்கத்துறை விசாரணைக்காக அழைக்கும்பேது அதில் இருந்து விலக்கு தேவை என்றால் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்ட கோர்ட்டை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க செந்தில்பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு இடைஞ்சலாக செயல்பட்டால் கோர்ட்டை நாடலாம் என அமலாக்கத்துறை தரப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.






