பெங்களூரு 'வந்தே பாரத்' ரெயிலில் திடீர் தீ.. பயணிகள் அலறியடித்து ஓட்டம்


பெங்களூரு வந்தே பாரத் ரெயிலில் திடீர் தீ.. பயணிகள் அலறியடித்து ஓட்டம்
x

தண்டவாளத்தில் ரெயில் சக்கரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இடையே தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பெங்களூரு,

பெங்களூரு- தார்வார் இடையேயும், தார்வார்-பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தார்வாரில் இருந்து பெங்களூருவுக்கு வந்த வந்தேபாரத் ரெயில் தாவணகெரே அருகே வந்தபோது திடீரென்று ஒரசக்கரங்கள் இருக்கும் பகுதியில் கரும்புகை வெளியேறியது.

இதை பார்த்த ரெயில்வே கிராசில் இருந்த ஊழியர் உடனே ரெயில்வே ஊழியர்கள் மற்றும் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் அளித்தார். அதையடுத்து டிரைவர்கள் உடனே ரெயிலை நிறுத்தினர். இதனால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். அனைவரும் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். இதுகுறித்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார், ஊழியர்கள் ஆகியோர் தீயை உடனே அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக வந்தே பாரத் ரெயிலை சில மணி நேரம் இயக்காமல் தண்டவாளத்தில் நிறுத்தி வைத்தனர். வந்தே பாரத் ரெயிலில் வந்த பயணிகள் அனைவரும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

தண்டவாளத்தில் ரெயில் சக்கரங்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இடையே தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிலமணி நேரத்திற்கு பிறகு அந்த ரெயில் பத்திரமாக தாவணகெரே ரெயில் நிலையத்துக்கு வந்தது.

1 More update

Next Story