கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி,
2021 ஆம் ஆண்டு, டெல்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் சாகர் ராணா என்பவர் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் சோனு மற்றும் அமித்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சுஷில் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. உடற்கூராய்வு அறிக்கையில், சாகர் ராணாவின் தலையில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, டெல்லி காவல்துறையினர் சுஷில் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சாகர் ராணாவின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்றும், முன்னதாக இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தபோது சுஷில் குமார் முக்கிய சாட்சியை மிரட்டியதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு , சுஷில் குமாரின் ஜாமீனை ரத்து செய்து, ஒரு வாரத்துக்குள் சரணடைய உத்தரவிட்டது.






