மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுக்கவில்லை: திமுக வழக்கறிஞர் வில்சன்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததாக சில ஊடகங்களில் தவறுதலாக செய்திகள் வந்துவிட்டதாக வில்சன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி தரவில்லை என திமுக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;
”2018-ல் திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்த விவகாரத்தில் 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்த நிலையில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தங்களது குறைகளை தெரிவியுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
மேகதாது அணை தொடர்பான குறைகள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். அதை மீறி அவர்கள் ஏதாவது செய்தால், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு செல்வதற்கு இந்த உத்தரவு நமக்கு வழி வகுக்கும். அதற்குள், மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததாக சில ஊடகங்களில் தவறுதலாக செய்திகள் வந்துவிட்டன. அது தவறு. மேகதாது அணை கட்டிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு எந்த அனுமதியையும் வழங்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.






