ஆச்சரியப்பட வைத்த தேர்தல் முடிவுகள்

பீகார் தேர்தலில் 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
கூட்டணி எதுவாக இருந்தாலும் சரி, முதல்-மந்திரி மட்டும் இவர்தான் என்ற வகையில் 20 ஆண்டுகளாக பீகாரில் முதல்-மந்திரி பொறுப்பை அலங்கரிப்பவர் நிதிஷ்குமார். இந்த முறை அந்த வாய்ப்பு கிடைத்தால் 10-வது முறையாக முதல்-மந்திரி பொறுப்பை ஏற்பார். அவர் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டாலும், அதிக இடங்களில் வெற்றி பெறும் ராஷ்டிரீய ஜனதா தளம் அல்லது பாஜகவின் ஆதரவோடு முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றுவிடுவது இவரது பெரிய சாதனை.
பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 2020-ம் ஆண்டு தேர்தலில் கூட வெறும் 43 தொகுதிகளில்தான் நிதிஷ்குமார் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஆனால் பாஜக 74 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், வழக்கம்போல நிதிஷ்குமாரே முதல்-மந்திரியாக இருந்தார். இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 122 இடங்கள் தேவையான நிலையில், 200 இடங்களுக்கும் மேல் பிடித்து பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. வழக்கம் போல பாஜகவைவிட குறைந்த தொகுதியில் வெற்றி என்றாலும் மீண்டும் நிதிஷ்குமாரே முதல்-மந்திரியாக பொறுப்பேற்பாரா என்பது சஸ்பென்சாக இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், மத்திய மந்திரி சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி ஆகிய கட்சிகளைக்கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும்தான் போட்டி நிலவியது.
இதில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்தியா கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம் 143 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 61 இடங்களிலும் போட்டியிட்டது. பெண்கள் ஓட்டுகளை அப்படியே சுருட்டிக்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மிக லாவகமாக காய்களை நகர்த்தியது. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும், தொழில் தொடங்குவதற்காக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கியதோடு மட்டுமல்லாமல் வாக்குறுதிகளையும் வாரி வழங்கியது. ஆக கை மேல் பாஜகவின் கூட்டணி கொடுத்த ரூ.10 ஆயிரம் பெண்களுக்கு வந்த பிறகு, இந்தியா கூட்டணியின் பெண்களுக்கான வாக்குறுதி எதுவும் எடுபடவில்லை. எனவே பெண்கள் ஓட்டுகள் அப்படியே தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் விழுந்து விட்டது.
எல்லாவற்றையும்விட முக்கிய தேர்தல் முடிவாக கடந்த முறை 75 இடங்களில் வெற்றி பெற்ற ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி, இந்த முறை 30-க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டு இருக்கிறது. அதேபோல் முதல்-மந்திரி வேட்பாளராக இருந்த தேஜஸ்வி யாதவும் 14,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரசை பொருத்தமட்டில் கடை விரித்தும் கொள்வார் இல்லை என்பதையே தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. அந்த கட்சி ஒற்றைப்பட இலக்கில் மட்டுமே சொற்ப வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த கட்சிக்கு தலையெடுக்க முடியாத அளவு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. இதேபோல பலருக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து வெற்றி பெற வைத்த, பிரசாந்த் கிஷோர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆற்றை கடக்க பலருக்கும் பரிசல் உதவும். ஆனால், அந்த பரிசல் கரையேராமல் கடைசிவரை ஆற்றிலேயே மிதக்கும் என்பதையே இது பிரதிபலிக்கிறது. பீகாரில் தேர்தலுக்கு முன்பு வெளியான 19 தேர்தல் முடிவு கணிப்புகள் மிக சரியானவை என்று தேர்தல் முடிவுகள் நிரூபித்து இருக்கிறது.






