தேர்தல் ஆணையத்தை கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக்கிவிட்டார்கள்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் நமது கூட்டணியை பிளவுபடுத்த பார்க்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.
சென்னை:
சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“தேர்தல் ஆணையத்தைக் கீ கொடுத்தால் ஆடும் பொம்மையாக்கிவிட்டார்கள். தேர்தல் ஆணையர் நியமனத்தில்தான் சதி என்றால், வாக்காளர் பட்டியலிலும் சதி நடக்கிறது. ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில் தரவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று எச்சரித்தோமோ, அதெல்லாம் நடக்கிறது.
அமலாக்கத் துறையை வைத்து ஒத்துவராத எதிர்க்கட்சிகளை மிரட்டுவார்கள் என்றோம். அது நடக்கிறது. உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தினால் ஓடி வந்து ஒட்டிக்கொள்ள நாம் என்ன பழனிசாமியா? தமிழ்நாடு மக்கள் அரசியல் தெளிவு, அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்கள். தமிழ்நாட்டுக்காக உண்மையாக உழைத்தவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும். 2026 தேர்தலில் இந்தக் கூட்டணிதான் வெற்றி பெறும். திராவிட மாடல் 2.0 சிறப்பாக இருக்கும்.ஜனநாயகம் வெல்ல களம் நிற்கும் அத்தனை தோழர்களுக்கும் எனது ‘ரெட் சல்யூட்’.
கொள்கை முரணில் ஒரு போதும் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. திராவிட இயக்கத்துக்கும் பொதுவுடமை இயக்கத்துக்கும் இடையே உள்ளது கொள்கை நட்பு. ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள் நமது கூட்டணியைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள். கூட்டணியில் இருந்தாலும், நியாயமான விமர்சனங்களை முன்வைக்க கம்யூனிஸ்ட் தயங்குவதில்லை” என்றார்.






