இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 06-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 May 2025 1:52 PM IST
13-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு - வானிலை மையம்
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 13-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதால், இந்தாண்டு மே மாதத்தில் வெயிலின் தாக்கம் பெரியளவில் இருக்காது என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
- 6 May 2025 1:47 PM IST
சாலை விபத்தில் காயம் அடைந்தால் இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முதல் 7 நாட்களுக்குள் ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 6 May 2025 1:44 PM IST
'ஸ்குவிட் கேம் சீசன் 3' ...இறுதி சாப்டரின் டீசர் வெளியீடு - வைரல்
'ஸ்குவிட் கேம் சீசன் 3' தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தநிலையில், இந்த தொடரின் 3-வது சீசன் வரும் ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் சமீபத்தில் அறிவித்தது.
இந்த நிலையில் இந்த தொடரின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில், 'ஸ்குவிட் கேம் சீசன் 3' இந்த தொடரின் கடைசி சாப்டர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 6 May 2025 1:14 PM IST
பா.ஜ.க. பெண் நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை: என்ன காரணம்..? சரணடைந்த 3 பேர்
பாஜக முன்னாள் நிர்வாகி சரண்யா கொலை வழக்கில் 3 பேர் மதுரை மாவட்ட கோர்ட்டில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 6 May 2025 12:41 PM IST
நில அபகரிப்பு வழக்கு: மனைவியுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக உத்தரவு
நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் இன்றும் நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து வருகிற 23-ந்தேதிக்கு விசாரணை தள்ளிவைத்த நீதிபதி, அன்று இருவரும் ஆஜராக வேண்டும் என்றும், தவறினால் அவர்கள் இல்லாமலேயே வழக்கின் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
- 6 May 2025 12:16 PM IST
நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை நான் மறக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை.
அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன். அதற்கு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும், உங்களில் ஒருவனான எனக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 6 May 2025 11:27 AM IST
வடகாடு சம்பவம்: மதுபானக் கடைகளை மூட உத்தரவு
புதுக்கோட்டை, வடகாடு சுற்றிய கிராமங்களில் செயல்பட்டு வரும் 3 அரசு மதுபான கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 6 May 2025 10:46 AM IST
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 6 May 2025 10:41 AM IST
போர்க்கால ஒத்திகை.. மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகள் என்னென்ன?
மத்திய உள்துறை அமைச்சகம் பல மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள தயாராகும் வகையில் சில மாநிலங்களில் நாளை (புதன்கிழமை) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.