நாத்தனார் திருமணத்திற்கு வைத்திருந்த நகைகளை திருடிய இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்

அக்ரமின் சகோதரிக்கு வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் அக்ரம். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே, அக்ரமின் சகோதரிக்கு வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சகோதரியின் திருமணத்திற்காக அக்ரம் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை தனது வீட்டில் சேர்த்து வைத்துள்ளார்.
இதனிடையே, வீட்டில் வைத்திருந்த நகைகள் அனைத்தும் கடந்த 23ம் தேதி இரவு மாயமாகியுள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அக்ரம் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நகைகளை மணப்பெண்ணின் நாத்தனாரும், அக்ரமின் மனைவியுமான ஆயிஷாவே திருடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. நகைகள் அனைத்தையும் தனது தாயார் வீட்டிற்கு திருடி சென்றுள்ளார். இதையடுத்து, ஆயிஷா திருடிய நகைகளை மீட்ட போலீசார் அதை அக்ரமிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






