2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு


2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை... தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு
x

தனது 2 மகள்களையும் பள்ளிக்கு செல்ல விடாமல் வீட்டிலேயே மஞ்சுநாத் சிறை வைத்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மேலும் மஞ்சுநாத் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குடிபோதைக்கு மஞ்சுநாத் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையே பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்த தனது 2 மகள்களையும் திடீரென்று பள்ளிக்கு செல்ல விடாமல் வீட்டிலேயே மஞ்சுநாத் சிறை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 சிறுமிகளும், பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர்களை சந்தித்துள்ளனர்.

அப்போது தங்களை, தங்களது தந்தையே குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், இதுகுறித்து வெளியே கூறிவிடுவோம் என்பதால் பள்ளிக்கூடத்திற்கு விடாமல் வீட்டுக்குள்ளேயே சிறை வைத்து இருப்பதாகவும் கூறி கதறி அழுதனர். இந்த கொடூர சம்பவம் பற்றி மஞ்சுநாத்தின் தாயிடம் கிராம மக்களும், ஆசிரியர்களும் புகாா் தெரிவித்தனர்.

இதைகேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கு முன்பு தன்னையும் மஞ்சுநாத் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். நான் கத்தி கூச்சலிட்டதால் அவன் வீட்டில் இருந்து தப்பி ஓடி சில நாட்கள் வீட்டுக்கே வராமல் இருந்ததாகவும் கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதார். இதை கேட்டு கிராம மக்கள் அனைவரும் கொதித்து எழுந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், மஞ்சுநாத் தான் பெற்றெடுத்த 2 குழந்தைகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும் தனது தாயையும் அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதனால் எங்கள் ஊரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே மஞ்சுநாத்தை கைது செய்து தூக்கில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் தெரிவித்தார். மேலும் சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கவும், போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெற்ற மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த மஞ்சுநாத்தை நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story