பீகார் தேர்தல் முடிவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம்: ராஷ்டிரீய ஜனதாதளம்

பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அடங்கிய கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.
பாட்னா,
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ராஷ்டிரீய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பாட்னாவில் நடந்தது. தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அக்கட்சி வேட்பாளர்களும் பங்கேற்றனர். அதில், தேர்வு முடிவுகளுக்கு பல்வேறு வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்சியின் செய்தித்தொடர்பாளர் சக்தி சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- பீகார் தேர்தல் முடிவு, கள நிலவரத்தையோ, மக்களின் விருப்பத்தையோ பிரதிபலிக்கவில்லை. மாநில அரசு மீது மக்களுக்கு இருந்த கோபத்தையும் மீறி, இந்த தீர்ப்பை பெற்றுள்ளனர். இதை மக்களாலும், அரசியல்வாதிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த தலைவர் ஜெகதானந்த் சிங் கூறுகையில், ‘‘ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் 25 ஆயிரம் வாக்குகள் இருந்தன. அதையும் மீறி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்’’ என்றார். அனைத்து ஆதாரங்களையும் சேகரித்த பிறகு கோர்ட்டுக்கு செல்வோம் என்று மற்றொரு வேட்பாளர் தெரிவித்தார்.






