பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன? சித்தராமையா வெளியிட்ட தகவல்

அரசியல் விளையாட்டை விளையாட நான் விரும்பவில்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று விளையாடின. இதில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று, முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றுள்ளது. அந்த அணிக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 11 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுபற்றி சித்தராமையா, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். அவருடைய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான காரணம் பற்றி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்து உள்ளார். 35 ஆயிரம் பேர் கூட கூடிய இடத்தில் லட்சக்கணக்கானோர் கூடினர். இந்த அதிக அளவிலான மக்கள் கூட்டமே, நெரிசல் ஏற்பட காரணம் என கூறினார். சின்னசாமி ஸ்டேடியத்திற்கு வெளியே 2 முதல் 3 லட்சம் பேர் கூடி விட்டனர்.
இது ஒரு மிக பெரிய சோகம். கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்து உள்ளனர். நான் மருத்துவமனைக்கு நேரில் சென்றேன். இதுபோன்ற சம்பவம் ஒருபோதும் நடக்க கூடாது. இதற்காக அரசு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறது என்றார். உயிரிழந்தவர்களில் பலரும் இளைஞர்கள். இதில் அரசியல் விளையாட்டை விளையாட நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.






