அப்படி என்னதாங்க செய்வாங்க...? ஆன்லைனில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சத்திற்கு ஆணுறைகளை வாங்கி குவித்த நபர்

2025-ம் ஆண்டில் அதிக பரிசுகளை வழங்கிய நாட்களாக ரக்சா பந்தன், நண்பர்கள் தினம், காதலர் தினம் ஆகியவை உள்ளன.
புதுடெல்லி,
உலக வாழ்க்கை மிகவும் குறுகி விட்டது. முன்பெல்லாம் வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்குவதற்காக ஒவ்வொரு கடையாக சென்று தரம் வாய்ந்த பொருட்களை தேர்ந்தெடுத்து மக்கள் வாங்கி வருவார்கள். ஆனால், தற்போது பொருட்களை வாங்க நாம் கடைகளுக்கு அலைய வேண்டியதில்லை. ஆன்லைன் வழியே ஆர்டர் செய்து விட்டால், அதுவே வீடு தேடி வந்து விடும்.
இதனால், நேரம் மிச்சப்படும். அலைச்சலும் குறையும். இதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஆன்லைன் சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஒன்றான ஸ்விக்கி நிறுவனம் ஆண்டு இறுதியில் அறிக்கையை வெளியிடுவது வழக்கம். அதில், அவர்களுடைய ஆன்லைன் வழியே, இந்தியாவில் மக்கள் எப்படி ஷாப்பிங் செய்துள்ளனர்? என்பது தொடர்பான விவரங்கள் இருக்கும்.
இதில், தன்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய பொருளை பற்றிய சுவாரசிய தகவலை வெளியிட்டு உள்ளது. அந்த வாடிக்கையாளர் சென்னையை சேர்ந்தவர்.
ஓராண்டு முழுவதும் ஸ்விக்கி ஆன்லைன் செயலி வழியே அவர் நிறைய ஆணுறைகளை (காண்டம்) வாங்கியிருக்கிறார். இதற்காக அவர் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 398 செலவிட்டு உள்ளார். காண்டம் வாங்குவதற்காக தனித்தனியாக 228 முறை ஆர்டர் செய்திருக்கிறார். இது மாதத்திற்கு சராசரியாக 19 ஆர்டர்களாக உள்ளது.
இவ்வளவு எண்ணிக்கையில் அதனை வாங்கி அவர் என்ன செய்திருப்பார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனை சொந்த உபயோகத்திற்காக வாங்கினாரா? அல்லது அவற்றை விற்பனை செய்து விட்டாரா? அல்லது வேறு எதற்கும் பயன்படுத்தினாரா? என்ற தகவல்கள் தெரிய வரவில்லை.
அந்த அறிக்கையில் வெளியான தகவலில், ஆணுறைகள் பிரபலம் வாய்ந்தவை. 127 ஆர்டர்களில் ஒன்று ஆணுறை வாங்குவதற்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 மாதங்களில் செப்டம்பரிலேயே இதன் விற்பனை உச்சம் அடைந்து உள்ளது. இதன்படி 24 சதவீதம் அளவுக்கு அதிக அளவில் ஆணுறைகள் ஆன்லைனில் வாங்கப்பட்டு உள்ளன என தெரிய வந்துள்ளது.
பொருட்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு டிப்ஸ் எனப்படும் பணம் கொடுப்பது பற்றிய விவரமும் வெளிவந்துள்ளது. இதில், பெங்களூரு முதல் இடம் பிடித்துள்ளது. இதன்படி டெலிவரி செய்பவர்களுக்கு பெங்களூரு மக்கள் ரூ.68 ஆயிரத்து 600 டிப்ஸ் கொடுத்துள்ளனர்.
2-ம் இடத்தில் சென்னை (59,505) உள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப நகராக பெங்களூரு உள்ளபோதும், பெருந்தன்மை படைத்தவர்களும் அதிக அளவில் உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.
இதேபோன்று 2025-ம் ஆண்டில் அதிக பரிசுகளை வழங்கிய நாட்களாக ரக்சா பந்தன், நண்பர்கள் தினம், காதலர் தினம் ஆகியவை உள்ளன. அந்த அளவுக்கு ஆர்டர்கள் வந்துள்ளன. இதில், காதலர் தினத்தில் ஒரு நிமிடத்திற்கு 666 என்ற எண்ணிக்கையில் ரோஜாப்பூக்களுக்கு ஆர்டர்கள் குவிந்து விட்டன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.






