ரஷியாவிடம் இருந்து 5-வது ‘எஸ்-400’வான் பாதுகாப்பு அமைப்பு எப்போது கிடைக்கும்? வெளியான தகவல்

இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியாவின் வான் பாதுகாப்பை எஸ்-400 சிறப்பாக கையாண்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது
மாஸ்கோ,
எதிரி நாட்டு ஏவுகணைகள், டிரோன்களில் இருந்து இந்திய வான் பகுதியை பாதுகாக்க ரஷியாவிடம் இருந்து, 5 ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா வாங்க முடிவு செய்தது. இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ரூ.40 ஆயிரம் கோடியில் அந்த நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதில் 4 ‘எஸ்-400’ அமைப்புகள் இதுவரை இந்தியாவுக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள ஒரு அமைப்பும் அடுத்த ஆண்டுக்குள் ரஷியா வழங்கி விடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ராணுவ அமைச்சக அதிகாரிகள் நேற்று இதை தெரிவித்தனர். கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ சண்டையில் இந்தியாவின் வான் பாதுகாப்பை எஸ்-400 சிறப்பாக கையாண்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ரஷியாவிடம் எஸ்-400 வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த 2021, மாா்ச் மாதம் எச்சரித்திருந்தது. இதைப் பொருப்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடம் எஸ்-400-ஐ வாங்கியது. .எனினும், அடுத்த ஆண்டு ரஷியாவுடனான ஒப்பந்தம் முழுவதும் நிறைவடையும் பட்சத்தில் இந்தியா மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதிக்க நேரிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது






