இணைய தொடர் இயக்குனரை சுட்டுக் கொன்றது ஏன்? மும்பை போலீஸ் கமிஷனர் விளக்கம்

இயக்குனரை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் வந்தது என்பதற்கு மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி விளக்கம் அளித்துள்ளார்.
இணைய தொடர் இயக்குனரை சுட்டுக் கொன்றது ஏன்? மும்பை போலீஸ் கமிஷனர் விளக்கம்
Published on

மும்பை,

17 சிறுவர்களை சிறைப்பிடித்த இணைய தொடர் இயக்குனர் ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் ஏன் வந்தது என்பதற்கு மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை பவாய் பகுதியில் உள்ள ஏ.ஆர். ஸ்டூடியோவில் நேற்று முன்தினம் இணைய தொடர் (வெப் சீரிஸ்) இயக்குனரான ரோகித் ஆர்யா (வயது 50) சிறுவர்- சிறுமிகள் 17 பேர் உள்பட 19 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இணைய தொடரின் குழந்தை நட்சத்திர தேர்வுக்காக அவர்களை அழைத்து இந்த துணிகர சம்பவத்தை அரங்கேற்றினார்.

இதனால் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், போலீசார் மற்றும் கமாண்டோ படையினர் ஸ்டூடியோவுக்குள் அதிரடியாக நுழைந்து ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொன்று, சிறுவர்- சிறுமிகள் உள்பட 19 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

பிரதமர் மோடியின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ், மராட்டிய கல்வித்துறையில் எனது பள்ளி, அழகான பள்ளி என்ற திட்டத்தை செயல்படுத்தி, அதை கண்காணிக்கும் பணியில் ரோகித் ஆர்யா ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக அவருக்கு கல்வித்துறை பண பாக்கி கொடுக்க வேண்டி இருந்ததாகவும், இதற்காக பல முறை போராடி பலன் கிடைக்காததால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர், செய்வது அறியாமல் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

எம்.பி.ஏ. படித்துள்ள அவர் சமூக சிந்தனை உடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் பல ஆவண படங்களை எடுத்துள்ளார். பிரேம் சோப்ரா உள்ளிட்ட நடிகர்களிடம் விழிப்புணர்வு வீடியோ எடுத்துள்ளார். இந்த நிலையில் ரோகித் ஆர்யாவை சுட்டுக் கொல்ல வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கேள்வியும் எழுந்தது.

இதுதொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி கூறியதாவது:- ரோகித் ஆர்யாவிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். எதற்காக சிறுவர்களை சிறைபிடித்து வைத்திருந்தார் என்பதை அவர் தெளிவுப்படுத்தவில்லை. அவர் பிடித்து வைத்திருந்த குழந்தைகள் பதற்றத்தில் இருந்தனர். ஒரு குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அவர் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு குழந்தைகளை விடுவிக்க முன்வரவிலலை. அவரின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும், குழந்தைகளின் உயிருடன் விளையாட அனுமதிக்க முடியாது. ஏர்கன் துப்பாக்கியால் அவர் தான் போலீசாரை நோக்கி முதலில் சுட்டார். எனவே தற்காப்புகாக போலீசார் அவரை சுட்டனர். அந்த தருணத்தில் எங்களுக்கு வேறு வழியில்லை. குழந்தைகளை பாதுகாப்பாக மீட்க வேண்டியதும் எங்களது கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

இதனைதொடர்ந்து கல்வித்துறைக்காக ரோகித் ஆர்யா செய்த பணி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு மந்திரி ததா புசே உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com