உலகின் மிக நெரிசலான நகரங்கள்: 2-வது இடத்தில் பெங்களூரு

நெரிசலமான நகரங்களின் பட்டியலில், முதல் 35 இடங்களில் 7 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
பெங்களூரு,
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘டாம்டாம்’(TomTom) என்ற தொழில்நுட்ப நிறுவனம், 2025-ம் ஆண்டில் உலக அளவில் அதிக நெரிசலான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமான பெங்களூரு 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் முதலாவது இடத்தில் மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி உள்ளது. பெங்களூருவை தொடர்ந்து, 3-வது இடத்தில் அயர்லாந்து தலைநகரான டப்ளின் உள்ளது. இந்த பட்டியல் உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் இருக்கக்கூடிய சராசரி பயண நேரம் மற்றும் நெரிசல் நிலைகள் தொடர்பாக கடந்த 2025-ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் சராசரி நெரிசல் அளவு 74.4 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1.7 சதவீதம் அதிகமாகும். பெங்களூருவில் 4.2 கி.மீ தூரத்தைக் கடக்க வாகன ஓட்டிகள் சராசரியாக 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்வதாகவும், 10 கி.மீ. தூரத்தைக் கடக்க சராசரியாக 36 நிமிடங்கள் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 17-ந்தேதி பெங்களூரு நகரத்தின் மிக மோசமான பயண நாளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நாளில் நெரிசல் அளவுகள் 101 சதவீதமாக உயர்ந்ததாகவும், இதனால் 2.5 கி.மீ தூரத்தைக் கடக்க 15 நிமிடங்கள் ஆனதாகவும் கூறப்பட்டுள்ளது.
பெங்களூருவைத் தவிர, உலகின் மிக நெரிசலமான நகரங்களின் பட்டியலில், முதல் 35 இடங்களில் மேலும் 6 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி 5-வது இடத்தில் புனே, 18-வது இடத்தில் மும்பை, 23-வது இடத்தில் புதுடெல்லி, 29-வது இடத்தில் கொல்கத்தா, 30-வது இடத்தில் ஜெய்ப்பூர் மற்றும் 32-வது இடத்தில் சென்னை ஆகிய நகரங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.






