ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றலாம்.. புதிய செயலியில் வசதி

செல்போன் எண் மாற்றுவது, முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்யும் புதியவசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
சென்னை,
ஆதாரில் இருக்கும் செல்போன் எண்ணை மாற்றுவதற்கு ஆதார் மையத்தை தேடி அலைய வேண்டியதில்லை. இனி வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் மாற்றி விடலாம். அதற்கான வசதி செயலியில் வந்துள்ளது.
இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் (Aadhaar App) என்ற புதிய செயலியை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் ஆதார் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அது வந்து உள்ளது. அதன் மூலம் புதிய செல்போன் நம்பர் வாங்குவது, வங்கியில் புதிய கணக்கு தொடங்குவது, ஒட்டலில் தங்குவதற்கு ஆதார் அட்டை நகல் கொடுப்பது அல்லது கைரேகை வைப்பது எல்லாம் இனி தேவையில்லை. அந்த ஆதார் புதிய செயலியில் உள்ள கியூ-ஆர் கோடு காண்பித்தால் போதுமானது. அல்லது அவர்கள் காட்டும் கியூ.ஆர்.கோட்டினை ஸ்கேன் செய்தால் போதும். அதன் மூலம் நமது ஆதார் உறுதி செய்யப்படும். இந்த டிஜிட்டல் முறையால் நமது ஆதார் எண்ணையோ, முகவரியோ அவர்களால் பார்த்து கொள்ள முடியாது.
தற்போது இந்த செயலியில் ஆதார் செல்போன் எண் மாற்றுவது, முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்யும் புதியவசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஆதாரில் முகவரி மாற்றம் போன்ற பணிகளை ஆன்லைனில் அல்லது எம் ஆதார் மூலம் செய்யலாம். ஆனால் செல்போன் நம்பர் மாற்றுவது, பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி கொடுப்பது போன்ற பணிகளை எல்லாம் ஆதார் மையத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும். அங்கு சென்றால் ஒரு நாள் முழுவதும் வீணாகி விடுகிறது. அதற்கு தீர்வு காணும் வகையில் புதிய ஆதார் செயலியில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இனி வீட்டில் இருந்தப்படியே செல்போன் மூலம் இந்த பணிகளை செய்து விடலாம்.
இப்போது முதல்கட்டமாக செல்போன் நம்பர் மாற்றும் வசதி நடைமுறைக்கு வந்து விட்டது. நாம் புதிய ஆதார் செயலியில் முக அங்கீகாரம் கொடுத்து பதிவு செய்து விட்டு உள்ளே சென்றால், அதில் My Aadhaar Update என்று உள்ளது. அதனை கிளிக் செய்தால், செல்போன் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி பதிவு போன்ற விவரம் வரும். அதில் தற்போது செல்போன் நம்பர் மாற்றும் வசதியை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. மற்ற வசதிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் பயன்படுத்த முடியும். செல்போன் எண் மாற்றுவதற்கு ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும். உடனே நாம் புதிய செல்போன் நம்பரை ஆதாரில் பதிவு செய்து விடலாம்.






