காதலனை வசியம் செய்து தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி


காதலனை வசியம் செய்து தருவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி
x

கோப்புப்படம் 

காதலனை வசியம் செய்து தருவதாக கூறி இளம்பெண்ணிடம் மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூரு ஆடுகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்த நிலையில், அந்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு, மாந்திரீகம் மூலம் வசியம் செய்தல் போன்ற விளம்பரத்தை பார்த்தார்.

இதையடுத்து இளம்பெண் தனது காதலனை வசியம் செய்து மயக்கி தனது வலையில் சிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து தகவல்களை தெரிந்து கொள்ள நினைத்த இளம்பெண் அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில், சந்திரசேகர் சுகத் குரு என்ற சாமியார் அந்த பெண்ணிடம் பேசினார்.

அப்போது அவர் தனது காதலனை மாந்திரீகம் மூலம் வசியம் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட சாமியார், காதலனை வசியம் செய்வதற்கு பூஜைகள் செய்ய வேண்டும் என்றும், அதற்கு பணம் அனுப்ப வேண்டும் என்றும் இளம்பெண்ணிடம் கூறினார். இதனை நம்பிய இளம்பெண், பூஜைகளுக்காக சாமியார் கேட்கும் போதெல்லாம் பல்வேறு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் வரை அனுப்பினார்.

இந்த நிலையில், சாமியார் நேற்று முன்தினம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு காதலனை மயக்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும் அதற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என்று கூறினார். அப்போது சாமியார் தன்னிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றி வருவது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலி சாமியாரிடம் தான் அனுப்பிய பணத்தை இளம்பெண் திரும்ப கேட்டார். ஆனால், அவர் பணத்தை திரும்ப கொடுக்க மறுத்துள்ளார். மேலும் இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஆடுகோடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி சாமியாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 More update

Next Story