காஞ்சீபுரம்: சாலையில் சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து


காஞ்சீபுரம்: சாலையில் சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 11 Feb 2025 12:51 AM IST (Updated: 11 Feb 2025 5:57 AM IST)
t-max-icont-min-icon

மனநல காப்பகத்தில் இருந்து தப்பியவர், சாலையில் சென்ற வாலிபரை கத்தியால் குத்தினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே வையாவூர் செல்லும் சாலையில் அரை நிர்வாணத்துடன் ஆசாமி ஒருவர் அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி கற்களை கொண்டு தாக்க முயற்சித்து ரகளை செய்தார். அப்போது அந்த வழியாக சென்ற வையாவூர் பகுதியைச் சேர்ந்த பரத் என்ற வாலிபரை திடீரென அந்த ஆசாமி தான் வைத்திருந்த சிறிய கத்தியால் குத்தினார்.

இதில் காயமடைந்த பரத்தை அந்த வழியாக சென்றவர்கள் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கத்தியால் குத்திய அரை நிர்வாண ஆசாமியை பிடித்து தர்ம-அடி கொடுத்தனர்.

காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள் அந்த ஆசாமியை கடுமையாக தாக்கினார்கள். போலீசார் அரை நிர்வாண ஆசாமியை பொதுமக்களிடம் இருந்து போராடி மீட்டு ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

அதில், அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு ஈரோடு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது. மனநல காப்பகத்தில் இருந்து தப்பிய சதீஷ்குமார் ரெயில் மூலம் காஞ்சீபுரத்துக்கு வந்த நிலையில் வாலிபரை கத்தியால் குத்தி கதிகலங்க செய்தது தெரிய வந்தது.

1 More update

Next Story