உ.பி.: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் பிப்லா கிராமத்தை சேர்ந்த இளைஞர் விமல் (வயது 20). இவரும் ஷொராஹா கிராமத்தை சேர்ந்த அவரது உறவுக்கார 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், விமல் நேற்று தனது காதலியுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துள்ளார். விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த விமலை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு விமலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதேவேளை, விமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து அவரின் காதலியான சிறுமிக்கு தெரியவந்துள்ளது. காதலன் தற்கொலை செய்துகொண்டது குறித்து அறிந்த சிறுமி மனமுடைந்துள்ளார். பின்னர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரும் விஷம் குடித்துள்ளார். சிறுமியை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். ஒரேநாளில் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்






