மேலும் 23 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000


மேலும் 23 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000
x

மேலும் 23 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.

புதுச்சேரி

மேலும் 23 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்தார்.

புதுவை சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

நிர்வாக சீர்கேடு

ஜி 20 மாநாட்டை புதுச்சேரியில் நடத்தியது நமது மாநிலத்துக்கு கிடைத்த பெருமை. பிரதமர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த மாநாடு புதுச்சேரியில் நடத்தப்பட்டது. இதன் மூலம் நமது கலாசாரத்தை வெளிநாட்டவர் தெரிந்துகொள்ள முடிந்தது. கடந்த கால ஆட்சியில் சரி செய்ய முடியாத அளவுக்கு நிர்வாக சீர்கேடு இருந்தது. அதை மாற்றி கொண்டு வருவது எளிதானதல்ல. அதில் நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளது.

அதையும் தாண்டி மத்திய அரசு, கவர்னரின் ஒத்துழைப்புடன் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பஞ்சாலைகள், நூற்பாலைகளை மீண்டும் நடத்த முடியுமா? என்று நிலை உள்ளது. அங்கு வேலையில்லாமல் நிதியை செலவழிக்கிறோம். அது மக்களுடைய வரிப்பணம். அதனால் எந்த பயனும் இல்லாத நிலை உள்ளது. எனவே அங்கு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உரிய நிதியை கொடுத்துவிட்டு அவற்றை வேறுவழியில் பயன்படுத்த முடியுமா? என்று ஆலோசித்து வருகிறோம்.

எத்தனால் யூனிட்

கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.44 கோடி கொடுத்துள்ளோம். லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் யூனிட் அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் கேட்கிறது. ஸ்பின்கோ, கூட்டுறவு நூற்பாலைகளை தனியார் பங்களிப்புடன் இயக்க முடியுமா? என்று பார்க்கிறோம். இதுதொடர்பாக உரிய முடிவு எடுக்கவேண்டும்.

படித்து முடித்துவரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவது நமது கடமை. மத்திய அரசிடமிருந்து சேதராப்பட்டில் உள்ள 750 ஏக்கர் நிலத்தை பெற்றுள்ளோம். அங்கு ஐ.டி. பார்க், தொழிற்சாலைகளை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசுத்துறைகளிலும் சில வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளநிலை, மேல்நிலை எழுத்தர் பணிக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்தப்படும்.

சைக்கிள்-மடிக்கணினி

பாண்லேவுக்கு தேவையான பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது. அதற்கு தேவையான உதவியை அரசு செய்யும்?. தற்போது வெளிமாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்கிறோம். அதில் தடை ஏற்படும்போது பால் தட்டுப்பாடு உருவாகிறது.

இன்னும் ஓரிரு வாரத்தில் சைக்கிள், இலவச சீருடை, மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கப்படும். சென்டாக் மூலம் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் செயல்படுத்தப்படாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

23 ஆயிரம் பேருக்கு நிதியுதவி

13 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 23 ஆயிரம் பேருக்கு நிதியுதவி வழங்கும் கோப்பு தயார்நிலையில் உள்ளது. கடந்த ஆண்டில் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி 96 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.


Next Story