சங்கராபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலி


சங்கராபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலி
x

வில்லியனூர் அருகே நண்பர்களுடன் குளித்தபோது சங்கராபரணி ஆற்றில் பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே நண்பர்களுடன் குளித்தபோது சங்கராபரணி ஆற்றில் பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

பிளஸ்-2 மாணவர்கள்

வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தம் மீனாட்சிபேட்டை பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகன் பரத் (வயது 17). இவர் முத்தரையர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவருடன் தருமாபுரி பகுதியை சேர்ந்த சிவா (17), தாரகைஸ்வரன் (17), கலையரசன் (17), ராகுல் (16), கமலேஷ் (17) ஆகியோரும் படித்து வருகின்றனர்.

இதனிடையே தருமாபுரி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகன் விஷ்வா (17) என்பவர் அப்பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் வேலை செய்யும் போது, அம்மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்துள்ளார். விஷ்வா 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் மேற்கொண்டு படிக்காமல் வேலை செய்து வந்தார்.

சேற்றில் சிக்கி 2 பேர் பலி

இந்நிலையில் இன்று முத்தரையர்பாளையம் பகுதியில் கோவில் திருவிழா என்பதால் அப்பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் பரத், விஷ்வா உள்ளிட்ட 7 பேரும் வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது பரத், விஷ்வா தவிர்த்து மற்ற 5 பேரும் கரையோர பகுதியில் குளித்துள்ளனர். பரத்தும், விஷ்வாவும் அங்குள்ள ஒரு மரத்தின் மீது ஏறி ஆற்றின் ஆழமான பகுதியில் குதித்தனர்.

அப்போது இருவரும் தண்ணீரில் இருந்து மீண்டும் மேலே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது நண்பர்கள், அப்பகுதியில் தேடி பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சல் போட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் ஓடி வந்து ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். அப்போது அவர்கள் இருவரும் ஆற்றின் ஆழமான பகுதியில் சேற்றில் சிக்கி மூச்சு திணறி இறந்தது தெரியவந்தது.

கதறி அழுத பெற்றோர்

இருவரது உடல்களையும் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலைய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story