அ.தி.மு.க. பிரமுகரிடம் கொள்ளையடித்த 10 பேர் கைது


அ.தி.மு.க. பிரமுகரிடம் கொள்ளையடித்த 10 பேர் கைது
x

புதுவையில் அ.தி.மு.க. பிரமுகரிடம் கத்தி முனையில் கொள்ளையடித்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 15 லட்சம் ரொக்கம், 24 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி

புதுவையில் அ.தி.மு.க. பிரமுகரிடம் கத்தி முனையில் கொள்ளையடித்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 15 லட்சம் ரொக்கம், 24 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கத்தி முனையில் கொள்ளை

புதுவை ரெயின்போ நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 60). அ.தி.மு.க. பிரமுகர். கடந்த 19-ந்தேதி இரவு வீட்டுக்கு முன் நின்று கொண்டிருந்த இவரிடம் காரில் வந்த 3 பேர் முகவரி கேட்பதுபோல் பேச்சு கொடுத்தனர்.

திடீரென அவர்கள் தங்களிடம் இருந்த கத்தியை காட்டி மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை தாக்கி வீட்டில் இருந்த ரூ.38 லட்சம் ரொக்கம், 82 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து அவர்கள் சென்றனர்.

இதுதொடர்பாக பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா உத்தரவின்பேரில் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

10 பேர் கைது

இந்த தனிப்படையினர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பது தொடர்பாக ஆய்வு செய்தனர்.

இதில், அ.தி.மு.க. பிரமுகரிடம் கொள்ளையடித்தவர்கள் பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடியபோது தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

ஆனாலும் தொடர்ந்து அந்த ஆசாமிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 10 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் சூப்பிரண்டு சுவாதி சிங், இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொலை குற்றவாளி

அ.தி.மு.க. பிரமுகர் கருணாநிதிக்கு சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. அவரிடம் பழக்கடைக்காரரான ரியாஸ் என்பவரும் அடிக்கடி பணம் வாங்கி உள்ளார்.

கருணாநிதியிடம் பணம் தாராளமாக புழங்குவதை அறிந்த அவர் தனது நண்பர்களான லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் (26) மற்றும் சிலரிடம் கூறியுள்ளார். இவர் மீது 3 கொலை உள்பட 15 வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் கருணாநிதியை மிரட்டி கொள்ளையடிக்க கிருஷ்ணகுமார் திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்களான நாவற்குளம் வெற்றிவேல், அரியாங்குப்பம் கார்த்தி, மெக்கானிக் கார்த்தி, ரியாஸ், முத்தியால்பேட்டை ஆனந்த், ஸ்டாலின், முகமது ஆசிக் அலி, லாஸ்பேட்டை ஜான், நாவற்குளம் மணி மற்றும் சிலரை சேர்த்துக் கொண்டார்.

இதையடுத்து 2 வாரங்களாக நோட்டமிட்டு கருணாநிதியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர். அப்போது கடந்த 19-ந்தேதி கத்திமுனையில் கொள்ளையடித்துள்ளனர்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா

பின்னர் அவர்கள் நகை, பணத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு விடுதியில் அறை எடுத்து ஆடம்பரமாக சுமார் ரூ.5 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். அதன்பின் புதுவை திரும்பிய நிலையில் தான் குற்றவாளிகள் போலீஸ் பிடியில் சிக்கினர்.

அவர்களிடமிருந்து ரூ.14 லட்சம் ரொக்கம் மற்றும் செயின், மோதிரம் உள்ளிட்ட 24 பவுன் நகைகள் மற்றும் கார், 6 செல்போன்கள், 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடிவருகிறோம். அவர்களிடம் மீதமுள்ள நகை, பணம் இருப்பதாக தெரிகிறது. அவர்களை கைது செய்தபின் நகை, பணத்தை மீட்போம்.

முக்கிய குற்றவாளியான கிருஷ்ணகுமாரை பிடிக்க சென்றபோது தப்பியோட மாடியில் இருந்து குதித்தார். அதில் தடுமாறி விழுந்ததால் அவரது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story