குழாய் மூலம் கியாஸ் வினியோகிக்க 4 நிறுவனங்களுக்கு ஒப்புதல்


குழாய் மூலம் கியாஸ் வினியோகிக்க 4 நிறுவனங்களுக்கு ஒப்புதல்
x

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு கியாஸ் வழங்கும் திட்டத்திற்கு 4 நிறுவனங்களுக்கு பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு கியாஸ் வழங்கும் திட்டத்திற்கு 4 நிறுவனங்களுக்கு பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

குழாய் மூலம் கியாஸ் வினியோகம்

மத்திய அரசு நாடு முழுவதும் நகர எரிவாயு வினியோக வலையமைப்புகளை விரிவுப்படுத்துகிறது. இதன் மூலம் தூய்மையான இயற்கை எரிவாயு (கியாஸ்) குழாய் மூலம் வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த எரிவாயு (சி.என்.ஜி.) போக்குவரத்து எரிபொருளாக பயன்படுத்துவதற்கும் ஏதுவாகும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 'புதுச்சேரி நகர எரிவாயு வினியோக கொள்கை-2023' புதுச்சேரி அரசு தொழில் மற்றும் வணிகத்துறையின் மூலம் அறிவித்துள்ளது.

விதிமுறைகள்

இந்த கொள்கையின் நோக்கமானது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயற்கை எரிவாயுவை பசுமை மற்றும் சுத்தமான எரிபொருளாக உபயோகிப்பதை ஊக்குவிக்கவும், இயற்கை எரிவாயுவை தடையின்றி வழங்குவதற்கும், தொழில்துறை, வணிகம், போக்குவரத்து மற்றும் வீட்டு உபயோகத்திற்கான பயன்பாட்டை படிப்படியாக ஊக்குவிப்பதற்கு பொருத்தமான விதிமுறைகளை உருவாக்க வழிவகை செய்யும்.

4 நிறுவனங்களுக்கு ஒப்புதல்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (பி.என்.ஜி.ஆர்.பி.) எரிவாயு குழாய்களை அமைப்பதற்கும் இயக்குவதற்கும் பின்வரும் நிறுவனங்களுக்கு பிராந்தியம் வாரியாக ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி புதுச்சேரியில் ஈஸ்ட் கோஸ்ட் நேச்சுரல் கேஸ் டிஸ்டிரிபியூஷன் பிரைவேட் லிமிடெட், காரைக்காலில் டோரண்ட் கேஸ் பிரைவேட் லிமிடெட், மாகியில் இந்தியன் ஆயில்-அதானி கேஸ் பிரைவேட் லிமிடெட், ஏனாம் எச்.சி.ஜி. ஏனாம் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story