போலீஸ் நிலையத்தை கால்டாக்சி டிரைவர்கள் முற்றுகை


போலீஸ் நிலையத்தை கால்டாக்சி டிரைவர்கள் முற்றுகை
x

ஆட்டோ டிரைவர்கள் மிரட்டியதை கண்டித்து கால் டாக்சி டிரைவர்கள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி

ஆட்டோ டிரைவர்கள் மிரட்டியதை கண்டித்து கால் டாக்சி டிரைவர்கள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மிரட்டல்

புதுச்சேரியில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வாடகை கார்களை இயக்கி வருகின்றன. இந்த கார்களில் உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகம் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு கால் டாக்சி டிரைவரான கதிர்காமத்தை சேர்ந்த சரத்குமார் (வயது 38) என்பவர் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்த பயணியை காரில் ஏற்றிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர்கள் செந்தில், ஆனந்த் ஆகியோர் அவரை வழிமறித்து எங்களுக்கு வர வேண்டிய சவாரியை ஏன் ஏற்றுகிறாய்? என்று கூறி தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து டாக்சி டிரைவரை தாக்க முயற்சி செய்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் கால் டாக்சி டிரைவர்கள் பலர் அங்கு ஒன்று கூடினர். இதனால் மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

முற்றுகை

இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கால் டாக்சி டிரைவர்கள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக புகார் அளித்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து கால் டாக்சி டிரைவர் சரத்குமார் இது தொடர்பாக புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Next Story