தயாராகி வரும் சிமெண்டு தடுப்புகள்


தயாராகி வரும் சிமெண்டு தடுப்புகள்
x

விபத்துகளை தடுக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் வைக்க சிமெண்டு தடுப்புகள் தயாராகி வருகின்றன.

அரியாங்குப்பம்

விபத்துகளை தடுக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் வைக்க சிமெண்டு தடுப்புகள் தயாராகி வருகின்றன.

4 வழிச்சாலை பணி

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் தற்போது விழுப்புரம்- புதுச்சேரி வழியாக நாகபட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக சாலையின் நடுவில் சிமெண்டு தடுப்புகள் வைக்க போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தில் இருந்து, தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில், புதுச்சேரி எல்லையான முள்ளோடை வரை தற்காலிகமாக இரும்பு பேரிகார்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பிரதிபலிப்பு தடுப்புகள் சாலையின் நடுவில் வைக்கப்பட்டன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக விபத்துகளும், உயிர் சேதமும் குறைந்து வருகிறது.

முழு வீச்சில் தயாரிப்பு

இதையடுத்து இந்த பகுதியில் நிரந்தரமாக சிமெண்டால் ஆன தடுப்புகள் வைப்பதற்கு போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகள் முடிவு எடுத்தனர். இதற்காக தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் பகுதியில் சிமெண்டு தடுப்புகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

100-க்கும் மேற்பட்ட சிமெண்டு தடுப்புகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், விபத்துகளை குறைக்கும் வகையிலும் அவை சாலையின் நடுவில் வைக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


Next Story