புதுவை வழியாக கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை


புதுவை வழியாக கிறிஸ்தவர்கள் பாதயாத்திரை
x

வேளாங்கண்ணியில் மாதா கோவில் பெருவிழாவிற்கு கிறிஸ்தவர்கள் புதுவை வழியாக பாதயாத்திரை சென்றனர்.

புதுச்சேரி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக ஒரு வாரத்திற்கு முன்னதாக சென்னை, திண்டிவனம், மரக்காணம், கோட்டக்குப்பம் ஆகிய பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அவர்கள் இன்று காலையில் புதுச்சேரி வழியாக வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் ஆட்டோ, கார்களில் மாதா சிலைகளை வைத்து, மாதா கொடியுடன் பாதயாத்திரையாக சென்றனர். புதுவைக்கு வந்த கிறிஸ்தவர்கள் ரெயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து சென்றனர். அப்போது அவர்களுக்கு தன்னார்வலர்கள் அன்னதானம், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கினர்.


Next Story