கடல் அரிப்பை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்


கடல் அரிப்பை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 24 Jun 2023 4:44 PM GMT (Updated: 24 Jun 2023 6:12 PM GMT)

புதுவை பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காலாப்பட்டு

புதுவை பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதமடைந்ததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தூண்டில் முள்வளைவு

புதுவை பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதை தடுக்க தூண்டில் முள்வளைவு அமைக்கவேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தின் பொம்மையார்பாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் முள் வளைவுகளால் தற்போது அங்கு ஓரளவு பாதுகாப்பான நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்ற தூண்டில் முள் வளைவு அமைக்குமாறு புதுவை மீனவர்களும் வலியுறுத்தினார்கள்.

கல் கொட்டும் பணி தாமதம்

ஆனால், புதுவை பகுதியில் கல்கொட்டும் பணி மிகவும் தாமதமாக நடந்துள்ளது. ஒரு பகுதியில் மட்டுமே கற்கள் கொட்டப்பட்டது. மேலும் சேதம் அதிகம் ஏற்படும் இடங்களில் கல்கட்டும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் காரணமாக பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பு கடுமையாக ஏற்பட்டது. கடற்கரையோரம் இருந்த சுமார் 10 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மீனவர்கள் வலைகளை பாதுகாப்பாக வைத்திருக்கும் களமும் கடல் சீற்றத்துக்கு தப்பவில்லை. அதன் அடிப்பகுதி அரிக்கப்பட்ட நிலையில் கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது.

திடீர் சாலை மறியல்

இதைத்தொடர்ந்து மீனவர்கள் தங்களது படகுகள், வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். படகுகளை அங்குள்ள சுடுகாட்டு பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர். கடலோரம் இருந்த மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் ஆத்திரமடைந்த மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் காலாப்பட்டு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கற்கள் கொட்ட...

அப்போது கடல் அரிப்பை தடுக்க மேலும் கற்கள் கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.


Next Story