வீடு வீடாக பரிசோதனை செய்யும் 'சந்திரயான் ஆரோக்கியம்' புதிய திட்டம்

வீடுவீடாக சென்று சுகாதார பரிசோதனை செய்யும் ‘சந்திரயான் ஆரோக்கியம்’ திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
புதுச்சேரி
வீடுவீடாக சென்று சுகாதார பரிசோதனை செய்யும் 'சந்திரயான் ஆரோக்கியம்' திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
சந்திரயான் திட்டம்
சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் மக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் ஆயுஷ்மான் பவா என்ற திட்டத்தின் தொடக்கவிழா புதுவை கம்பன் கலையரங்கில் இன்று நடந்தது. விழாவை காணொலி காட்சி மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்.
மேலும் சந்திரயான் எனப்படும் ஆரோக்கியத்தை நோக்கி என்ற திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்து அதற்கான இலச்சினையை வெளியிட்டனர். இந்த திட்டத்தின்படி ரத்தசோகை, சர்க்கரை, ரத்த கொதிப்பு, எடை உயர பரிசோதனை, காசநோய், உடல் பருமன், மகப்பேறு பரிசோதனை, குழந்தைகளுக்கு எடைக்கு ஏற்ற வளர்ச்சி உள்ளதா? என்று சுகாதார ஊழியர்கள் வீடுவீடாக சென்று பரிசோதனை மேற்கொள்வார்கள்.
கவுரவிப்பு
திட்டத்தை தொடங்கிவைத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இலவச சத்துணவு வழங்கி வரும் தன்னார்வலர்கள், அதிக ரத்ததானம் கொடுத்தவர்கள், மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரிகள், நர்சுகள், அங்கன்வாடி ஊழயர்கள், ஆரோக்கியமான குழந்தை, சிறந்த தாயார், சாலை விபத்துகளில் அடிபட்டவர்களை தக்க நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற தன்னார்வலர்களை பாராட்டி கவுரவித்தனர்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
சிறப்பு மருத்துவ வசதி
ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதுவையில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கான காப்பீடு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இதன் மூலம் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி கிடைக்கும்.
அரசு ஆஸ்பத்திரியில் வாரந்தோறும் 6 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்கிறோம். இவை 100 சதவீத வெற்றியை அடைந்துள்ளது. மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் நம்மிடம் உள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 13 ஆபரேசன் தியேட்டர்களை கொண்டுவர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்தியில்லை
சிறப்பு மருத்துவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியுள்ளோம். புதுவை மாநிலம் சுகாதாரத்தில் முதல் இடத்தில் உள்ளது. இதில் எனக்கு திருப்தியில்லை. இன்னும் சிறப்பான மருத்துவ வசதிகளை நாம் கொடுக்கவேண்டும்.
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்கும். நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகளை யாரும் குறைசொல்ல முடியாது.
கல்வியும் நமது மாநிலத்தில் எளிதாக கிடைக்கிறது. மருத்துவக்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடம் கொடுப்பதால் ஏழை மாணவர்கள் பயன்பெறுவர். சென்டாக் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தி வருகிறது. இந்த தொகையை தனியார் கல்லூரிகளுக்கு முன்கூட்டியே செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதுவையில் 60, காரைக்காலில் 40 என பி.எஸ்சி நர்சிங் படிப்பில் 100 இடங்களை தொடங்க உள்ளோம். மேலும் ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
உறுதிமொழி
முன்னதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அனைவரும் உடல்தான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கென்னடி, பாஸ்கர், சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் துணை இயக்குனர் முரளி நன்றி கூறினார்.