கல்வி கற்கும் போதே மாணவிகளுக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமம்


கல்வி கற்கும் போதே மாணவிகளுக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமம்
x

கல்வி கற்கும்போதே மாணவிகளுக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.

காரைக்கால்

கல்வி கற்கும்போதே மாணவிகளுக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா கூறினார்.

பழகுனர் ஓட்டுநர் உரிமம்

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் காரைக்கால் போக்குவரத்து துறை சார்பாக அனைத்து அரசு கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்கும் போதே பழகுனர் ஓட்டுநர் உரிமம் எல்.எல்.ஆர். வழங்கும் நிகழ்ச்சி அவ்வையார் அரசு பெண்கள் கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு 21 மாணவிகளுக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமத்தை வழங்கி பேசியதாவது:-

புதுச்சேரியில் மகளிருக்கு என்று பிங்க் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து துறையில் சனிக்கிழமைகளில் மகளிருக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக மாணவிகளுக்கு கல்லூரிக்கே தேடி சென்று வழங்கப்படுகிறது. மாணவிகள் ஹெல்மெட் அணியாமல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது.

கல்வி கற்கும்போதே...

எனவே பழகுனர் ஓட்டுநர் உரிமம் வழங்கும்போது மாணவிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும். இந்த கல்லூரியில் படிக்கும் 1200 மாணவிகளில் 550 பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 21 பேருக்கு பழகுனர் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். கல்வி கற்கும்போதே மாணவிகள் அனைவரும் பழகுனர் ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி அங்காளன், கல்லூரி முதல்வர் பாலாஜி, உதவி போக்குவரத்து அதிகாரி கல்விமாறன் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story