சுகாதார ஊழியர்கள் போராட்டம்


சுகாதார ஊழியர்கள் போராட்டம்
x

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார ஊழியர்கள் 2 மணி நேரம் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

புதுச்சேரி

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி சுகாதார ஊழியர்கள் 2 மணி நேரம் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர்.

போராட்டம்

புதுச்சேரி மாநில சுகாதார ஊழியர்கள் மத்திய கூட்டமைப்பு சார்பில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஆணைப்படி பணிக்கட்டமைப்பு மற்றும் நியமன விதிகளை மாற்றி அமைத்திட வேண்டும், ஊதியக்குழு சம்பள விகிதங்களை அமலாக்கிட வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அனைத்து மருத்துவ நிறுவனங்களில் பணி செய்யும் ஊழியர்கள் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்தினர். இதில் செவிலியர்கள், மருந்தாளுனர், வார்டு அட்டெண்டர், உதவியாளர் உள்பட அனைத்து பிரிவு ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

நோயாளிகள் அவதி

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அன்புச்செல்வம் தலைமை தாங்கினார். சங்க பொறுப்பாளர்கள் பாக்கியவதி, சாந்தி, சாகிரா பானு, முருகையன், வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் காரணமாக புதுச்சேரி அரசு மருத்துமனைகளில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் சிகிச்சைபெற வந்திருந்த வெளிப்புற நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக காத்திருந்த நோயாளிகள் 10 மணிக்கு மேல் தொடர்ந்து சிகிச்சை பெற்றனர்.


Next Story