அடுக்குமாடி குடியிருப்பு அனுமதி இன்றி கட்டப்பட்டதா?


அடுக்குமாடி குடியிருப்பு அனுமதி இன்றி கட்டப்பட்டதா?
x

காரைக்கால் பைபாஸ் சாலை பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு அனுமதி இன்றி கட்டப்பட்டதா? என்று நகராட்சி ஆணையர் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காரைக்கால்

காரைக்கால் பைபாஸ் சாலை பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு அனுமதி இன்றி கட்டப்பட்டதா? என்று நகராட்சி ஆணையர் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருமாதி கொட்டகை

காரைக்கால் பைபாஸ் சாலை பகுதியில், திருநகர், பெரியபேட் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் கருமாதி கொட்டகை உள்ளது. இந்த கருமாதி கொட்டகை பின்புறம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, வீட்டுமனைகள் தனியாரால் போடப்பட்டு வருகிறது. அங்கு சாலை அமைப்பதற்காக, கருமாதி கொட்டகையை இடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

சாலை சேதம்

இந்தநிலையில், அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்ல போடப்பட்ட சாலையை மர்ம நபர்கள் சிலர், சேதப்படுத்தி உள்ளனர். மேலும் கருமாதி கொட்டகையை சுற்றி கருங்கல் நடப்பட்டுள்ளது. இது அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், அடுக்குமாடி குடியிருப்பு அனுமதியின்றி கட்டப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. இது காரைக்காலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது காரைக்கால் நகராட்சி தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களை வழங்க கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டப்படி (ஆர்.டி.ஐ), செல்வம் என்பவர் நகராட்சி ஆணையருக்கு மனு ஒன்றை அனுப்பினர். அதில் நகராட்சி சார்பில் குடியிருப்பு கட்ட ஆட்சேபிக்கப்பட்டதா? பிற துறைகளின் ஆட்சேபனை இல்லாததற்கான ஆவணங்களை குடியிருப்பு உரிமையாளர் நகராட்சியிடம் வழங்கி இருக்கிறாரா? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது.

நகராட்சி ஆணையர் பதில்

அதற்கு நகராட்சி ஆணையர் அளித்துள்ள பதிலில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு நகராட்சி அனுமதி அளிக்கவில்லை, ஆட்சேபிக்கவும் இல்லை. அடுக்குமாடி கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஆட்சேபனை இல்லாததற்கான ஆவணங்களை அதன் உரிமையாளர் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பதில் மூலம் திருநகர், பெரியபேட் உள்ளிட்ட கிராம மக்கள், புதுச்சேரி முதல்-அமைச்சருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், கருமாதி கொட்டகையை பாதுகாக்க உடனே, சுற்றுச்சுவர் கட்டவேண்டும், இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் குறித்து நகராட்சி ஆணையரின் தகவல் அறியும் உரிமை சட்ட பதில், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story