பருத்தியை எடுக்காமல் செடியிலேயே விடும் அவலம்


காரைக்காலில் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுவதால் பருத்தியை எடுக்காமல் செடியிலேயே விடும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

காரைக்கால்

குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுவதால் பருத்தியை எடுக்காமல் செடியிலேயே விடும் அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

அடிமாட்டு விலை

காரைக்கால் மாவட்டம், டெல்டா பகுதியுடன் இணைந்த காவிரி கடை மடை பகுதி ஆகும். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் தான். ஆண்டுக்கு 3 போகம் நெல் விளைந்த பூமியில் படிப்படியாக பருத்தி விவசாயத்தை நோக்கி விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

கடந்த 2022-ம் ஆண்டு காரைக்காலில் மட்டும் 1,200 ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டது. இந்த ஆண்டு 4,500 ஏக்கரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி ரூ. 120க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ 45 ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது கடந்த ஆண்டு 100 கிலோ பருத்தி மூட்டை ரூ.12,000 விற்றது என்றால் நடப்பாண்டில் 100 கிலோ பருத்தி மூட்டை வெறும் ரூ.4,500க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

பெரும் நஷ்டம்

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து கிலோ வெறும் ரூ.45க்கு தான் பருத்தி கொள்முதல் செய்யப்படுவதால் கூலி கூட கிடைப்பது இல்லை. இதனால் பல விவசாயிகள் பருத்தியை எடுக்காமல் செடியிலேயே விட்டுள்ள அவலம் இருந்து வருகிறது. அதேநேரத்தில் காரைக்கால் மாவட்ட வேளாண்துறையின் முறையான கவனிப்பு இல்லாததால், பருத்தி காய் முற்றி வெடித்து பஞ்சு வரும் பருவத்தில் சிம்பின் மாவு பூச்சி, சப்பாத்தி பூச்சி உள்ளிட்ட பல்வேறு பூச்சிகளால் செடிகள் பாதித்து பருத்தி விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து, காரைக்கால் கடைமடை பகுதி விவசாயிகள் சங்கத்தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

வேடிக்கை பார்க்கும் வேளாண்துறை

மாவட்ட வேளாண்துறை விவசாயிகளின் வேதனையை வேடிக்கை பார்க்கின்றதே தவிர உதவி செய்ய முன்வரவில்லை. வேளாண்துறையோடு இணைந்த பாசிக் ஊழியர்களுக்கு பல மாதம் சம்பள பாக்கி உள்ளது. இதனால் அவர்கள் விவசாயிகளுக்கு உதவ முன்வருவதில்லை. அதேபோல், 100 நாள் வேலை காரணமாக, ஆள் பற்றாக்குறை உள்ளது. எனவே காரைக்கால் மாவட்டத்தில் நடப்பாண்டில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் மற்றும் பயிர் காப்பீடு தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். பருத்தி, பஞ்சு மற்றும் விதைகளை தனித்தனியே பிரிக்கும் சிறிய வகையிலான எந்திரங்கள் தமிழ்நாட்டில் உள்ளது போல், காரைக்காலிலும் வழங்க அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story