புதுவையில் விரைவில் மருத்துவ பல்கலைக்கழகம்

புதுவையில் விரைவில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி
புதுவையில் விரைவில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
புதிய கட்டிடம்
புதுச்சேரி பொறியியல் கல்லூரி தற்போது தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது. விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார்.
புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, விழா மலரை வெளியிட்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தொழில் நிறுவனங்கள்
விவேகானந்தர் கூறியது போல இளைஞர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியை மீட்டெடுப்பது தான் நமது கடமை. பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் குண்டு துளைக்காத கவச உடை தற்போது இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. இளைஞர்களால் முடியும்.
இதுபோன்ற பல்கலைக்கழகங்கள் அதைத்தான் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். புதுவையில் பல தொழில் நிறுவங்களை தொடங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
ரங்கசாமி
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவையில் எப்படி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டுள்ளதோ, அதேபோல், மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.
மாணவர்களுக்கு தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் அரசுக்கு அதிக அக்கறை உண்டு. பிரதமர் மோடி புதுச்சேரியில் நல்ல கல்வியை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதற்கேற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து, ஆரம்ப கல்வி முதல் நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் அரசு அக்கறை செலுத்தி வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் எல்லோருக்கும் இலவச கல்வி என்பதை அரசு தீவிரமாக கடைபிடித்து வருகிறது.
முன்மாதிரி மாநிலம்
சேதராப்பட்டில் 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி வைத்துள்ளோம். அங்கு பல தொழிற்சாலைகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பது அரசின் கடமையாகும்.
புதுவை அரசு சட்டக்கல்லூரியில் படித்தவர் இன்று அட்டர்னி ஜெனரலாக இருப்பது இன்னும் பெருமை சேர்ப்பதாக உள்ளது. புதுவை ஒரு முன்மாதிரி மாநிலமாக இருக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். அதனை நிறைவேற்ற அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நமச்சிவாயம்
அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பிரதமர் சொன்னதுபோல் பெஸ்ட் புதுச்சேரியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, பட்ஜெட்டில் ரூ.1,100 கோடியை அரசு ஒதுக்கி, கல்வித்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுவைக்கு ஐ.டி. நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளை கொண்டுவந்து ஒரு தொழிற்புரட்சியை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரவேண்டும். மேலும், அதற்கான பயிற்சியையும் அளித்து மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
டிரோன் அறிமுகம்
விழாவில் சபாநாயகர் செல்வம், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், கல்வித்துறை செயலாளர் ஜவகர், இயக்குனர் ருத்ரகவுடு, தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து உருவாக்கிய வேளாண் டிரோன் கருவி அறிமுகப்படுத்தப்படடது.






