என்.ஆர்.காங்.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் - முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி


என்.ஆர்.காங்.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் - முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
x
தினத்தந்தி 8 July 2023 5:28 PM GMT (Updated: 9 July 2023 8:27 AM GMT)

புதுச்சேரியில் டாக்டர்கள், என்ஜினீயர்கள் கஞ்சா விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.ஆர்.காங்.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி

டாக்டர்கள், என்ஜினீயர்கள் கஞ்சா விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்.-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை குஜராத் ஐகோர்ட்டு உறுதி செய்தது. மேலும் தண்டனைக்கு தடை கேட்டு தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.என்.ஆர்.பாலன், அனந்தராமன், கார்த்திகேயன் மற்றும் பல்வேறு அணி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மக்கள் பலம்

ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசுகையில், 'குஜராத் ஐகோர்ட்டு மேல்முறையீடு வழக்கில் ராகுல்காந்திக்கு சாதகமான தீர்ப்பு வராது என்பது தெரியும். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றால் ராகுல்காந்திக்கு ஆதரவாக தீர்ப்பு வரும். அதன்பின் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் நுழைந்து விடுவார் என்று திட்டமிட்டு குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு வேண்டுமென்றே காலதாமதமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பேச்சு சுதந்திரம் பறிக்கப்படும். எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வார்கள். அவர்களை தட்டிக்கேட்க ஆளில்லை. நம்மிடம் அதிகாரம், பணபலம் ஆகியவை இல்லாமல் இருக்கலாம். மக்கள் பலம் நம்மிடம் இருக்கிறது. ராகுல்காந்திக்கு குரல் கொடுப்போம்.'என்றார்.

தூக்கி எறிய வேண்டும்

தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசுகையில், 'பிரமருக்கு மக்களை பற்றி கவலையில்லை. புதுவை புல்லட் ரெயில் வேகத்தில் வளர்ச்சி பெற்று வருவதாக சொல்கிறார்கள். ஆனால் மக்களுக்கான எந்த திட்டமும் செயல்படுத்தபடவில்லை. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. இதனால் புதுவையில் டாக்டர்கள், என்ஜினீயர்கள் கஞ்சா விற்பனை செய்யும் நிலை உள்ளது. புதுவையில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோவில், காலி மனைகளை அபகரித்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கவர்னர் மாளிகையையே எழுதிக்கொடுத்து விடுவார்கள். புதுவையில் மோசமான ஆட்சி நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற செய்ய வேண்டும். புதுவையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது போல், வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுடன், புதுச்சேரியில் சட்டசபைக்கும் தேர்தல் வருவதற்காக வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நமக்கு பா.ஜ.க. முதல் எதிரி, என்.ஆர்.காங்கிரஸ் 2-வது எதிரி. புதுவையில் இருந்து என். ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்' என்றார்.

மகளிர் காங்கிரஸ்

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மகளிர் காங்கிரஸ் சார்பில் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது மகளிர் காங்கிரஸ் பஞ்சகாந்தி மற்றும் நிர்வாகிகள் காய்கறி மாலை அணிந்து வந்தனர். அப்போது அவர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


Next Story