என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் : முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் : முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x

அமைச்சரின் பதவி நீக்க விவகாரத்தால் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

நிராகரிப்பு

புதுவை அரசியலில் தற்போது குழப்பமான சூழல் நிலவுகிறது. சந்திரபிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாரா? அமைச்சராக நீடிக்கிறாரா? என்று தொடர்ந்து மக்களிடம் குழப்பம் நீடித்து வருகிறது. ஆனால் இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி எதுவும் பேசாமல் மவுனமாக உள்ளார்.

சந்திரபிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அந்த கடிதம் உள்துறைக்கு அனுப்பப்பட்டதாகவும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அந்த கடிதத்தை உள்துறை அமைச்சகம் நிராகரித்துவிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே சந்திரபிரியங்கா தொடர்ந்து அமைச்சராக நீடிக்கிறார். என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால் முதல்-அமைச்சரின் கடிதம் உள்துறை அமைச்சகத்தால் ஏற்கப்படவில்லை.

ராஜினாமா

முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கடி தரும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. புதுவை பா.ஜ.க.வினர் முதல்- அமைச்சருக்கு ஆதரவாக இருப்பதுபோல் நாடகமாடி இரட்டை வேடம் போடுகின்றனர். உள்துறை அமைச்சகம் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் கடிதத்தை நிராகரித்துவிட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அப்படி செய்வதுதான் அவருக்கு மரியாதையாக இருக்கும். மரியாதை இல்லாமல் அந்த பதவியை அனுபவிப்பது அழகல்ல. சபாநாயகர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி தலைமை செயலாளரை திரும்பப்பெற வேண்டும் என்று பேசியுள்ளார். தலைமை செயலாளரை மாற்ற வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். எம்.எல்.ஏ.க்களை அழைத்துப்பேச அவருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் நிர்வாகம் தொடர்பாக பேச சபாநாயகருக்கு உரிமையில்லை.

ஆட்சி நீடிக்குமா?

அடிக்கடி டெல்லி சென்று பிரதமர், உள்துறை மந்திரியை சந்திக்கும்போது அவர் ஏன் தலைமை செயலாளரை மாற்ற வலியுறுத்தவில்லை? என்.ஆர்.காங்கிரஸ் அரசை கவிழ்க்க அவர்கள் நேரம் பார்க்கின்றனர். இந்த ஆட்சி நாடாளுமன்ற தேர்தல் வரை நீடிக்குமா? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


Next Story