கலெக்டர் அலுவலகத்தை குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகை
x

வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை கைக்குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகையிட்டனர்.

காரைக்கால்

வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை கைக்குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகையிட்டனர்.

ஒப்பந்த நர்சுகள்

கொரோனா கால கட்டத்தின்போது மக்களின் உயிரை காக்க புதுவை, காரைக்காலில் கடந்த 2020-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 165 நர்சுகள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அப்போது அவர்களிடம் நர்சுகள் பணியிடங்களை நிரப்பும்போது முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. மேலும் அவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் பணிநீட்டிப்பும் வழங்கப்படவில்லை. தற்போது அவர்கள் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்தநிலையில் 105 நர்சு பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்த நர்சுகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒப்பந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வலியுறுத்தியும் கைக்குழந்தைகளுடன் நர்சுகள் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர் போராட்டம்

போராட்டத்தில் செவிலியர் சங்க தலைவி தமிழ்செல்வி, சரஸ்வதி, பொருளாளர் விஜயலட்சுமி, துணை பொருளாளர் சங்கீதா, சுகன்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் காரைக்கால் நகர போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி செவ்வாய்க்கிழமை முதல் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.


Next Story