மார்க்கெட்டுகளில் மீன் வாங்க குவிந்த மக்கள்


மார்க்கெட்டுகளில் மீன் வாங்க குவிந்த மக்கள்
x

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட்டுகளில் மக்கள் மீன் வாங்க குவிந்தனர்.

புதுச்சேரி

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட்டுகளில் மக்கள் மீன் வாங்க குவிந்தனர்.

மீனவர்கள்

புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை வங்கக்கடலில் மீன்பிடி தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடைக்காலத்தில் புதுவைக்கு வெளியூர்களில் இருந்தே மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதனால் மீன்கள் விலை வழக்கத்தை விட உயர்ந்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி தடைக்காலம் நிறைவு பெற்றது. அன்றைய தினமே புதுவை மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் 16-ந் தேதி முதல் கரைக்கு திரும்பினர். எதிர்பார்த்தது போல் மீன்கள் அதிகம் கிடைத்ததால் மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீன்கள் விற்பனை

நேற்று அமாவாசை என்பதால் பெரும்பாலானோர் மீன்கள் வாங்கவில்லை. இந்த நிலையில் தடைக்காலம் முடிவடைந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று மீன்கள் வாங்க பெரிய மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், முதலியார்பேட்டை மார்க்கெட்டுகளிலும், உப்பளம் சாலையில் இருந்து தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் செல்லும் வழி, அம்பேத்கர் சாலை, கடலூர் சாலை, வழுதாவூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீன் விற்பனை படுஜோராக நடந்தது. கொட்டும் மழையிலும் பொதுமக்கள் கூடி தங்களுக்கு பிடித்த மீன்களை பேரம் பேசி வாங்கிச்சென்றனர்.

விலை குறைந்தது

மீன்கள் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து புதுவையில் மீன்களின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று புதுவையில் ஒரு கூறு சங்கரா ரூ.300, கவளை ரூ.100, கணவா ரூ.200, கானாங்கத்தை ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.800-க்கும், கொடுவா ரூ.500-க்கும் விற்பனையானது. இந்த மீன்கள் விலை சில நாட்களில் இன்னும் குறையும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story