அதிக மின் அழுத்தத்தால் மிக்சி, டி.வி., பிரிட்ஜ் பழுது


அதிக மின் அழுத்தத்தால் மிக்சி, டி.வி., பிரிட்ஜ் பழுது
x

காரைக்காலில் அதிக மின் அழுத்தத்தால் மிக்சி, டி.வி., பிரிட்ஜ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுதானது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

கோட்டுச்சேரி

காரைக்காலில் அதிக மின் அழுத்தத்தால் மிக்சி, டி.வி., பிரிட்ஜ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பழுதானது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

கூடுதல் மின் அழுத்தம்

காரைக்காலை அடுத்த பிள்ளை தெருவாசலில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. மக்கள் தொகை, வர்த்தகத் தேவையை கருத்தில் கொண்டு இந்த மின் நிலையத்தை புதுச்சேரி அரசு நிறுவியது. இந்த மின் நிலையம் அமைக்கப்பட்டபின் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வெட்டு தவிர்க்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது மின் வடபாதையையும் ஊழியர்கள் ஆய்வு செய்து சிறுசிறு குறைகள் இருப்பினும் அதனை உடன் நிவர்த்தி செய்கின்றனர். ஆட்கள் பற்றாக்குறை ஒரு சவாலாக இருப்பினும் மின் பகிர்வு நிலைய செயல்பாடு நன்றாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட நகர் பகுதி மற்றும் கிராமங்கள் கூடுதல் மின் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மிக்சி, பிரிட்ஜ் பழுது

அதிக மின் அழுத்தம் காரணமாக வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், டி.வி., மிக்சி, வாஷிங் மெஷின், ஏ.சி, கிரைண்டர், மின்சார அடுப்பு போன்றவை மின் ஏற்றத் தாழ்வினால் பழுதானது. பல நேரங்களில் பழுது நீக்க முடியாதபடி செயலிழந்து விடுகின்றன. தற்போது நிலவும் கடும் வெயிலுக்கு மத்தியில் பொதுமக்கள் இரவிலும், பகலிலும் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.

மேலும், வணிக நிறுவனங்களில் காய்கறி, ஐஸ்கிரீம், மருந்துகள், மலர்கள், குளிர்பானங்கள், மதுவகைகள் வைக்கிற குளிரூட்டிகளும் பழுதாகி விடுவதாக வர்த்தகர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஓரிரு நாட்களில் சரியாகும்

இதுகுறித்து மின்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இந்த துணைமின் நிலையம் அதிநவீன தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. வருங்காலத் மின் தேவைகளை கவனத்தில் கொண்டு தானியங்கி மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.வருங்கால மின் தேவையை சந்திக்க தற்போதுள்ள தானியங்கி மின் மாற்றிகளில் அதிக சுற்றுக்கள் கொண்ட மின் வடங்கள் உள்ளன. இதனால், சற்று கூடுதல் மின் அழுத்தம் நிலவுகிறது இந்த மின் அழுத்த அதிகரிப்பை ஒழுங்குப்படுத்த தொழில் நுட்ப நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம். இது ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும்' என தெரிவித்தனர்.


Next Story