ஒரே நாளில் ஆன்லைன் மூலம் 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி


ஒரே நாளில் ஆன்லைன் மூலம் 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி
x

புதுவையில் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் அழகிய பெண்களிடம் பேசலாம், வெளிநாட்டில் வேலை எனக்கூறி ஒரே நாளில் 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி நடந்துள்ளது.

புதுச்சேரி

சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் அழகிய பெண்களிடம் பேசலாம், வெளிநாட்டில் வேலை எனக்கூறி ஒரே நாளில் 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி நடந்துள்ளது.

ஆன்லைன் மோசடி

புதுவையில் ஆன்லைன் மோசடிகள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. அதிலும் இந்த மோசடியில் படித்தவர்களே அதிகளவில் ஏமாந்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருப்பது தான் வேதனை. அவமானம் தாங்க முடியாமல் ஏமாந்தவர்கள் பலர் புகார் கொடுக்கவே முன்வருவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

அழகிய பெண்களை...

இந்த நிலையில் ஆன்லைன் மோசடி நபர்கள் நூதன வழிகளை கையாண்டு தங்கள் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றனர். இணையதளங்களில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் தேடுபவர்கள், ஆபாச படங்கள் பார்ப்பவர்களை குறி வைத்து மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

ஆன்லைனில் அழகிய பெண்களை தொடர்பு கொண்டு பேசலாம் என்று கூறி லிங்க்-குகளை அனுப்புகின்றனர். அதை நம்பி உள்ளே செல்பவர்களிடம் அதற்கு கட்டணம் என்று கூறி பணத்தை அபேஸ் செய்கின்றனர்.

9 பேரிடம் மோசடி

அதேபோல் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற பணம் அனுப்புங்கள், பான்கார்டு அப்டேட் செய்யவேண்டும், கூரியரில் பரிசு பொருட்கள் பெற வேண்டுமானால் பணம் அனுப்புங்கள் என்று கூறி பல்வேறு லிங்க்-குகளை அனுப்புகின்றனர்.

அதை உண்மை என நம்புபவர்கள் அந்த லிங்க்-குகளில் சென்று பணத்தை இழக்கின்றனர். நேற்று ஒருநாளில் மட்டும் இவ்வாறாக 9 பேரிடம் ரூ.6 லட்சத்து 82 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு ஆளானவர்கள் பெயர் விவரங்களை சைபர் கிரைம் காவல்துறை வெளியிடவில்லை.

இவ்வாறு இணைய வழியில் அதிக லாப முதலீடுகள் வேலைவாய்ப்பு அல்லது வங்கிகளில் இருந்து, கூரியரில் இருந்து வரும் அழைப்புகளையும் உறுதி செய்யாமல் ஏற்கவேண்டாம் என்று சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story