சனீஸ்வரர் கோவில் பூசாரி வீட்டில் ரூ.9½ லட்சம் நகை, பணம் கொள்ளை


சனீஸ்வரர் கோவில் பூசாரி வீட்டில் ரூ.9½ லட்சம் நகை, பணம் கொள்ளை
x

காரைக்காலில் இரவில் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த சனீஸ்வரர் கோவில் பூசாரி வீட்டில் ரூ.9½ லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

காரைக்கால்

இரவில் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த சனீஸ்வரர் கோவில் பூசாரி வீட்டில் ரூ.9½ லட்சம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கைவரிசை காட்டிய பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சனீஸ்வரர் கோவில் பூசாாரி

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பெருமாள் கோவில் சன்னதி தெருவில் வசிப்பவர் ரோகினி (வயது 60). இவர் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் கடந்த 40 ஆண்டுகளாக பூசாரியாக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

இதனால் ரோகினியும், ராஜேஸ்வரியும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 21-ந் தேதி மாலை அடையாளம் தெரிந்த, அதே வேளையில் முகவரி தெரியாத 50 வயது பெண் ஒருவர், ரோகினியை மாமா... என செல்லமாக அழைத்து, 30 வயதுடைய வாலிபர் ஒருவரை இது எனது மகன் வெங்கடேஷ் என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.

திருமணம் வேண்டி தரிசனம்

கடந்த முறை நான் சனீஸ்வரர் கோவிலுக்கு வந்தபோது, எனக்கு சிறப்பாக சாமி தரிசனம் செய்து வைத்தீர்கள். அதன் காரணமாக, எனது மகளுக்கு நல்லபடியாக திருமணம் ஆனது. இந்தமுறை எனது மகனுக்கு சாமி தரிசனம் செய்து வையுங்கள். அவனுக்கும் நல்ல படியாக திருமணம் ஆகட்டும் என கூறியுள்ளார்.

அதை கனிவுடன் கேட்ட பூசாரி, இன்றைய தினம் இரவு திருநள்ளாறிலேயே தங்குங்கள். காலை சாமி தரிசனம் செய்து வைக்கிறேன் என கூறி அனுப்பிவிட்டு, வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து பூசாரி ரோகினி வீட்டுக்கு இருவரும் சென்றனர். அவரிடம், 'எங்களுக்கு விடுதிகளில் தங்கி பழக்கம் இல்லை. உங்கள் வீட்டில் ஒரு ஓரமாக இரவு மட்டும் படுக்க இடம் கொடுத்தால் போதும். காலையில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு செல்கிறோம் என கெஞ்சியுள்ளனர்.

உணவில் மயக்க மருந்து

இதை உண்மை என்று நம்பிய பூசாரி ரோகினியும் ஓ...பேஷா தங்குங்கோ.. எனக்கூறி இருவரையும் வீட்டில் தங்க அடைக்கலம் கொடுத்துள்ளார். பின்னர் இரவு உணவை நல்ல ஓட்டலில் வாங்கி வருகிறோம். அனைவரும் ஒன்றாக சேர்ந்து உண்போம் எனக் கூறி, ஓட்டலில் இருந்து உணவை வாங்கி கொடுத்துள்ளனர்.

அதே வேளையில் பூசாரிக்கும், அவரது மனைவிக்கும் உணவில் மயக்கம் மருந்து கலந்து இருவரும் கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட தம்பதி நன்றாக அயர்ந்து தூங்கி விட்டனர்.

நகை, பணத்துடன் தப்பினர்

அதன் பின்னர், இருவரும் இரவோடு இரவாக பூசாரி ரோகினி வீட்டு பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் சில வெள்ளிப்பொருட்களையும் கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகி விட்டனர்.

மறுநாள் காலையில் பூசாரியும், அவரது மனைவி எழுந்து பார்த்தபோது வீட்டில் தங்கியிருந்த 2 பேரையும் காணாது அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வீட்டு பீரோ திறந்து கிடப்பதை கண்டும், அதில் வைத்திருந்த தங்க நகைகள், பணம், வெள்ளிபொருட்கள் திருட்டு போனதை கண்டு அச்சத்தில் உறைந்தனர்.

பெண் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து இன்று திருநள்ளாறு போலீசில் பூசாரி ரோகினி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பெண் உள்பட 2 பேரையும் தேடி வருகின்றனர்.

சாமி தரிசனம் செய்வதற்காக அடைக்கலம் கொடுத்த பூசாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருநள்ளாறில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story