காவலாளி மீது நிதி நிறுவன ஊழியர்கள் தாக்குதல்


காவலாளி மீது நிதி நிறுவன ஊழியர்கள் தாக்குதல்
x

கடனை திரும்ப செலுத்தி விட்டு தடையில்லா சான்றிதழ் கேட்ட போது நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதால் விரக்தி அடைந்த காவலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திரு-பட்டினம்

கடனை திரும்ப செலுத்தி விட்டு தடையில்லா சான்றிதழ் கேட்ட போது நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதால் விரக்தி அடைந்த காவலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூ.30 ஆயிரம் கடன்

காரைக்கால் திரு-பட்டினம் காமன் கோவில் தெருவைச்சேர்ந்த தனியார் நிறுவன காவலாளி முருக கணேஷ். இவரது மனைவி சுபஸ்ரீ (வயது 29). இவர் கோட்டுச்சேரி கீழகாசாகுடியில் உள்ள எல்.டி. நிதி நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.

இந்த கடன் தொகையை வட்டியுடன் சுபஸ்ரீ கடந்த மார்ச் மாதம் கட்டியுள்ளார். கடனை திருப்பி செலுத்திய நிலையில் தடையில்லா சான்றிதழ் கேட்டனர். ஆனால் 5 மாதம் ஆகியும் நிதி நிறுவனம் அதனை வழங்கவில்லை என்று தெரிகிறது.

தாக்குதல்

இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி நிதிநிறுவன அலுவலகத்திற்கு வந்து தடையில்லா சான்றிதழை பெற்றுகொள்ளுமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். அதன்படி, முருககணேஷ், சுபஸ்ரீ சென்றபோது, அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் பாண்டியன், தமிழரசன் உள்ளிட்ட 4 பேர், உங்கள் குழுவில் ஒரு நபர் கடன் தொகை கட்டவேண்டியுள்ளது. அதனை கட்டியப்பிறகுதான் தடையில்லா சான்றிதழ் தரமுடியும் என கூறி, கணவன், மனைவியை தாக்கி விரட்டியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த 2 பேரும் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, கோட்டுச்சேரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஊழியர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் நிதிநிறுவன ஊழியர் பாண்டியன் அளித்த புகாரின்பேரில் முருககணேஷ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தற்கொலை முயற்சி

இந்தநிலையில் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தாக்கி அவமானப்படுத்தியதாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு முருக கணேஷ் (42) எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நிதிநிறுவன ஊழியர்கள் தாக்கியதால் மனமுடைந்து காவலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story