சட்டசபையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்


சட்டசபையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்பு தீக்குளிக்க முயன்றதையடுத்து சட்டசபைக்கு வந்தவர்களை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே அனுமதித்தார்கள்.

புதுச்சேரி

முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்பு தீக்குளிக்க முயன்றதையடுத்து சட்டசபைக்கு வந்தவர்களை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே அனுமதித்தார்கள்.

பொதுமக்கள் சந்திப்பு

சட்டசபைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் களை சந்திக்க வருவார்கள். அவர்களிடம் போலீசார் மற்றும் சட்டசபை காவலர்கள் விசாரணை நடத்திவிட்டு சட்டசபை வளாகத்திற்குள் அனுப்பி வைப்பது வழக்கம்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு புகார்கள் சென்றன. தேவையற்ற முறையில் தங்களிடம் போலீசார் மற்றும் சபைக்காவலர்கள் விசாரிப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களை சந்திக்கத்தானே நாங்கள் இருக்கிறோம். அவர்களை காக்க வைக்காமல் உள்ளே அனுப்புங்கள் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளை அறிவுறுத்தி இருந்தார்.

தீக்குளிக்க முயற்சி

இதனால் பெரும்பாலானவர்களை சரிவர விசாரிக்காமல் சட்டசபை வளாகத்திற்குள் அனுப்பிவைத்தனர். இந்தநிலையில் நேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி முன் விவசாயி குடும்பத்தினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனால் முதல்-அமைச்சர் ரங்கசாமி கடும் அதிர்ச்சியடைந்தார். சம்பவம் நடந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து முதல்-அமைச்சரை சந்தித்து பேசினார்கள். அதன்பின் சட்டசபைக்கு வருபவர்களை உரிய சோதனை நடத்தி அனுமதிக்குமாறு போலீசாரையும், சட்டசபை காவலர்களையும் அறிவுறுத்தினர்.

திடீர் பரபரப்பு

இந்தநிலையில் புதுவை சட்டசபைக்கு இன்று வந்தவர்களை போலீசார் தீவிர விசாரணைக்கு பின்னரே அனுமதித்தனர். அவர்கள் கொண்டு வரும் பொருட்கள் மற்றும் கைப்பை போன்றவற்றை வாங்கி முழுமையாக சோதித்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கடும் சோதனைக்குப் பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதால் சட்டசபை வளாகத்தில் திடீர் பரபரப்பு காணப்பட்டது.


Next Story