கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

புதுச்சேரி கடற்கரை, திருக்காஞ்சியில் ஆடி அமாவாசையை யொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஏராளமானோர் வழிபட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை, திருக்காஞ்சியில் ஆடி அமாவாசையை யொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஏராளமானோர் வழிபட்டனர்.

சிறப்பான அமாவாசை

மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் தை, புரட்டாசி, ஆடி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பதன் மூலம் சந்ததி வளம்பெறும் என்பது நம்பிக்கை.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டுகளில் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும் புதுச்சேரியில் கடலில் நீராடுவது, தர்ப்பணம் கொடுப்பது நடந்தது.

அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையான இன்று புதுவை கடற்கரையில் ஏராளமானோர் கடலில் நீராடி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதேபோல் வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கதீர்த்தவராக நதீஸ்வரர் கோவிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலில் தர்ப்பணம் செய்வது புனிதமாக கருதப்படுவதால் ஆடி அமாவாசையான நேற்று ஏராளமானோர் இங்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.

தீர்த்தவாரி

ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் இருந்து கடற்கரைக்கு மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், கவுசிக பாலசுப்ரமணியர், வரதராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட உற்சவ சாமிகள் கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரிக்காக கடற்கரை காந்தி சிலை அருகே எழுந்தருளினர். கடற்கரைக்கு வந்து இருந்தவர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பல்வேறு அமைப்புகள் மற்றும் கோவில்கள் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story