மாணவர்களுக்கு பாடல்கள் மூலம் கணிதம் கற்பிப்பு


மாணவர்களுக்கு பாடல்கள் மூலம் கணிதம் கற்பிப்பு
x

காரைக்கால் அரசு பள்ளியில் கணித பாடங்களை பாடல்கள் வழியே கற்பிக்கும் ஆசிரியரின் புதிய முயற்சிக்கு பலதரப்பினரால் பாராட்டு குவிந்து வருகிறது.

காரைக்கால்

காரைக்கால் அரசு பள்ளியில் கணித பாடங்களை பாடல்கள் வழியே கற்பிக்கும் ஆசிரியரின் புதிய முயற்சிக்கு பலதரப்பினரால் பாராட்டு குவிந்து வருகிறது.

புதிய முயற்சி

காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி அரசு நடுநிலைப்பள்ளியில், கணித ஆசிரியராக சுரேஷ் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கணித பாடத்தை ஆடல், பாடல், பூ, மணிகள் கொண்டு எளிமையான முறையில் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கணித கருத்துகள் மற்றும் கணித சூத்திரங்களை பாடல்கள் மூலம் கற்பிக்கும் முறையை பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். காரைக்கால் முருகந்தாள் ஆச்சி மேல்நிலைப்பள்ளியின் இசை ஆசிரியை வெற்றி செல்வி, மாணவர்களின் கணித பாடல்களை கேட்டு அவற்றை மேம்படுத்த பல அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

பாடலில் கணித சூத்திரங்கள்

இதுகுறித்து பள்ளியின் கணித ஆசிரியர் சுரேஷ் கூறுகையில், கணித சூத்திரங்கள் மனதில் நினைவு கொள்ளுமாறும், கணித கருத்துக்கள் எளிதாக புரியுமாறும் பாடல்களை எழுதி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளேன். பாடல்களில் நாற்கரத்தின் பரப்பளவு, முக்கோணத்தின் வகைகள், புள்ளி விவரங்களின் எண்ணிக்கை குறிகள், பூஜ்ஜியம் மற்றும் குறை எண்களின் அறிமுகம், முழு எண்களின் கூட்டல், தனி வட்டி ஆகிய தலைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழிப் பாடல்களை தமிழாசிரியை மகேஷ்வரி, ஆங்கில வழிப் பாடல்களை ஆங்கில ஆசிரியை திலகா ஆகியோர் வழிகாட்டுதலின் படி உருவாக்கி உள்ளேன் என்றார்.

பள்ளி மாணவர்கள் விரும்பும் ஆடல், பாடல் வழியே கணிதத்தை கற்பிக்கும் ஆசிரியரின் இந்த புதிய முயற்சிக்கு பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

பள்ளி மாணவர்கள் கணிதப் பாடல்களை பாடி கல்வி கற்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story